search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர் வழிப்பாதை"

    • விவசாயிகள் உபரி நீரை குளங்களில் தேக்கி வைப்பதும் உண்டு.
    • விளைநிலங்களில், சாகுபடிக்கு ஆதாரமாகவும் இக்குளங்கள் உள்ளன.

    உடுமலை :

    உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் 118 குளம், குட்டைகளும், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 74,மடத்துக்குளம் ஒன்றியத்தில், 25க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.இதில், கால்வாய் மற்றும் சிற்றாறுகள் வாயிலாக, நீர் வரத்து கிடைக்கும் குளங்கள், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படுகின்றன.பிற குளங்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

    இக்குளங்களுக்கு பருவமழை காலத்தில் மட்டும் நீர்வரத்து இருக்கும்.பி.ஏ.பி., பாசனப்பகுதிகளில், விவசாயிகள் உபரி நீரை குளங்களில் தேக்கி வைப்பதும் உண்டு. சுற்றுப்பகுதி விளைநிலங்களின் நிலத்தடி நீர் மட்டத்துக்கும், கிணற்றுப்பாசனத்தின் வாயிலாக பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில், சாகுபடிக்கு ஆதாரமாகவும் இக்குளங்கள் உள்ளன.இந்நிலையில் குறிப்பிட்ட இடைவெளியில் தூர்வாராதது, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால், நீர் வழிப்பாதை மறைந்து போய் மழைக்காலத்தில், கூட குளங்களுக்கு நீர் வரத்து கிடைக்காத நிலை இருந்தது.

    நீண்ட கால இடைவெளிக்குப்பிறகு மத்திய அரசின், 'ஜல் சக்தி அபியான்', திட்டத்தில், குளம் மற்றும் நீர் வழிப்பாதைகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது.மேலும் குறிப்பிட்ட சில குளங்களில், மாநில அரசு நிதி பங்களிப்புடன், துார்வாருதல், மதகுகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், அதன்பிறகு மழைக்காலத்தில், பெரும்பாலான குளங்கள் நிரம்பின.பிறகு, கடந்த ஓராண்டுக்கும் மேலாக எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

    இதனால், பெரும்பாலான குளங்களுக்கான நீர் வழிப்பாதை புதர் மண்டிக்காணப்படுகிறது. சமீபத்தில் உடுமலை பகுதியில் தொடர் மழை பெய்தும் பெரும்பாலான குளங்களுக்கு நீர் வரத்து கிடைக்கவில்லை.வடகிழக்கு பருவமழை சீசனில், இக்குளங்கள் நிரம்பும் வகையில், உடனடியாக நீர் வழிப்பாதைகளை சீரமைக்கவும், குளங்களின் கரைகளை வலுப்படுத்தி, மழை நீரை சேகரிக்கவும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட நிதியின் கீழ் இப்பணிகளை, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகங்கள் வாயிலாக மேற்கொள்ள உத்தரவிட்டால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×